அரசியலுக்குள் ஆயிரம் பேர் வருவார்கள். ஆயிரம் பேர் போவார்கள். இந்த நிலையில், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக காலம் மறவாத கணவான் அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர் பீ.ஏ. மஜீட் என எல்லோராலும் அழைக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியின் பழைய மாணவனான முகம்மதலி அப்துல் மஜீட்.
1926.10.15 ஆம் திகதி சம்மாந்துறையில் வன்னியனார் பரம்பரையில் போஸ்மாஸ்டர் முகம்மதலி - கதீஜா தம்பதியினருக்கு சிரேஷ்ட புதல்வனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை 1933 ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பித்து 1934 இல் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் 1943 யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றார். 1947 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்குள் நுழைந்து கிழக்கின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற பெருமையோடு, பொருளியல் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். அதன் பின்னர், சிறிது காலம் மட்டு. சிவானந்தாவில் ஆசிரியராகவும் பணி செய்த பின் 1956 இல் அரசியலில் கால்பதித்தார்.
சம்மாந்துறை பட்டின சபைத் தேர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வீரமுனை வட்டார வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ் மக்களின் அழைப்பையேற்றுக் கொண்டார்.
‘அப்துல் மஜீட்’ ஆரம்ப காலத்தில் வாக்குக் கேட்டு வீடுகளுக்குச் சென்ற போது ஒரு பெண் கூறிய கூற்றை இப்போதும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வார். அது “உனக்கு வாக்குப்போட மாட்டேன். என் மகன் மஜீதுக்குத் தான் வாக்களிப்பேன்” இந்தளவுக்கு மஜீதைத் தெரியாதவர்களும், இவருக்கு வாக்களிப் பதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர்.
1960 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை மக்களின் நேரடியான தெரிவோடும் 1989 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அரசின் தேசியப் பட்டியலிலும் பாராளுமன்றம் சென்ற இவர், தொடர்ச்சியாக 34 வருடங்கள் சம்மாந்துறை மக்களை 100 ஆம் இலக்க ஆசனத்தில் பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவப்படுத்தியிருந்தார்.
34 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் பெருமையோடு வீற்றி ருந்த போதும், இவர் சார்ந்திருந்த ஐ.தே.க.வின் ஜே.ஆர். பிரேமதாச அரசுகள் இவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச் சராகப் பார்ப்பதற்கு முன்வரவில்லை யென்பது பெரும் குறை தான்.
பதவிகளுக்காக எப்போதும் எவரிட மும் அடிமைப்படாத எம்.ஏ. அப்துல் மஜீட், ஜயவர்தன அரசின் நில அபகரிப்புத் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் மட்டுமல்ல, மட்டு. மாவட்ட அமைச்சர் பதவியையும் தூக்கி வீசிக்காட்டிய முஸ்லிம் தலைவர்.
அதுபோல காணி விவசாயப் பதிலமைச் சராக வந்த போது நீண்ட காலமாக அம் பாறை மாவட்டத்தில் நிலவிய காணிப் பிரச்சினையைத் தீர்த்து முஸ்லிம்களின் 2000 ஏக்கர் நிலத்தைப் பாதுகாத்தவர். தென் கிழக்குப் பல்கலைக்கழகம் தோற்றம் பெறு வதற்கு மூல காரணியாய் அமைந்த தென் கிழக்கு இணைந்த பல்கலைக்கழக கல்லூ ரியை சம்மாந்துறையில் அமைத்துத் தந்தவர்.
1969 இல் சம்மாந்துறைக் குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்த போது, நீர் வள இடையூறு களால் பல்லாண்டுகளாய் தூர்ந்து போயிருந்த திட்டத்தை பிரேமதாச அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து மக்களுக்காக வெற்றி கண்டவர்.
மரணிக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டியவர். இலங்கையின் சரித்திரமாய் இருக்க வேண்டிய இவர், இனத்துவ அரசியலால் அடித்துச் செல்லப்பட்டு பாராளுமன்றத்திலிருந்து 1994 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார்.
அந்த ஓய்வுக் காலம் கூட இவரது வாழ்வின் ஒரு வசந்த காலமாக மாறியது. அரசியலைத் துறந்துவிட்டு ஆத்மீகத்தில் தன்னை முழுமைப்படுத்திக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல் ஊரிலிலுள்ள ஒவ்வொரு வீடுகளையும் தரிசிக்கும் பழக்கத்தையும், மக்களின் சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் உறவின் பாலத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
இதனால் மேலும்....... மேலும் மக்கள் இதயங்களில் இரண்டறக் கலந்த ஜனரஞ்சக வாதியானார். தனது துணைவியாரின் மரணத்தின் பின்னர் முற்று முழுவதுமாக சம்மாந்துறை மண்ணிலேயே தன் வாழ் நாளைக் கடத்தி வந்தார்.
‘தான் நோய் வாய்ப்பட்டால் சம்மாந்துறை யின் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சம்மாந்துறை வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்க வேண்டும்.
வேறு எங்கும் என்னைக் கொண்டு செல்லக் கூடாது. நான் சம்மாந்துறையிலேயே மரணிக்க வேண்டும்” அது போலவே “தான் அரசியல் அதிகாரத்தில் இருந்த போது திட்டமிட்டு தொடங்கி வைத்த ‘முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் மையவாடியிலேயே அடக்கம் செய்ய வேண்டும்” என்ற ஆசைகள் எல்லாம் சம்மாந்துறையை இவர் எவ்வாறு நேசித்தார் என்பதற்கு நல்ல உதாரணம்.
கல்வி - சமூக - பெருளாதார மற்றும் பெளதீக அபிவிருத்திகளில் இவரது பங்களிப்பு அளப்பரியது. சிறந்த வடிகால மைப்பு, பாதைப் பொறிமுறை, திட்டமிட்ட கிராம உருவாக்கம், விவசாய விருத்தி என அனைத்துக்கும் ஒரு கருவூலமாக இவரது பங்களிப்பு இருந்தது.
அரசியல் செய்வதற்காக இப்போதெல் லாம் இனவாதத்தைத் தூண்டி பிரிவினை வாதத்துக்குள் குளிர்காயும் பலருக்கு மத்தியில் இன ஒற்றுமைக்காக உழைத்த உன்னத மனிதனாக அல்-ஹாஜ் எம்.ஏ. அப் துல் மஜீட் திகழ்ந்தார்.
கிழக்குத் தமிழர்களின் இதயங்களில் என்றும் இவருக்கென்று தனியிடம் இருக்கிறது. தமிழர் உரிமைப் போராட்டக் குழுக்களெல்லாம் தோற்றம் பெற முன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக சொல்லாலும், செயலாலும் நிறைய சாதித்துக் காட்டியவர்.
கிராமிய பேச்சு வழக்கில் எங்கும் எல்லோரோடும் சுவாரஷ்யமாக பேசும் குணம் கொண்டவர். தன் அரசியல் விரோதிகள் மேடைகளில் வசைபாடிய போதும், அவர்களின் குறைகளைத் தூக்கிப்பிடித்து தேர்தல் செய்த சரித்திரம் இவரிடம் இருக்கவில்லை. மற்றவரைப் பற்றி புறம்பேசுதல் என்பதைப் பெருந்தன்மையோடு வெறுக்கும் இவர் எதையும் திறந்த மனதுடனே பேசிப் பழக்கப்பட்டவர்.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top