அபூ ஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் தாவுஸ் அஹ்மத் அத்தூஸி என்பதே இமாம் கஸ்ஸாலியின் முழுப் பெயர் ஆகும். எனினும் அவர் கஸ்ஸாலி என்றே அழைக்கப்பட்டார்.
தற்காலத்தில் குராசான் பகுதியிலுள்ள மஷ்ஹத் என்று அழைக்கப்படுவதும் அன்று தூஸ் என்று அழைக்கப்பட்டதுமான பிரதேசத்துக்கு அருகேயுள்ள தப்ரானில் உள்ள கஸ்ஸால் எனும் கிராமத்தில் ஹிஜ்ரி 450/கி.பி.1059 இல் பிறந்தார்.
அவரது தந்தை ஆழ்ந்த இறை பக்தியுடையவர். தனது கையால் உழைத்துப் பெற்ற உணவை மட்டுமே உட்கொண்டார். இறை நேசர்களுடன் தனது நோக்கத்தைக் கழித்தார். எனினும் கஸ்ஸாலியின் இளமைப் பருவத்தில் இறையடி எய்தினார். அவர் இறக்க முன் கஸ்ஸாலியையும் அவரது சகோதரரையும் வளர்க்கும் பொறுப்பை அவரது நண்பர்களில் ஒருவரான இறைநேசர் (சூபி) ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார். அவரின் மேற்பார்வையிலேயே கஸ்ஸாலி வளர்ந்தார்.
கஸ்ஸாலி இளமையில் தூஸ் நகரில் வாழ்ந்த சேஃ அஹ்மத் இப்னு முஹம்மத் அல் றஸ்கானி அல்தூஸி என்பவரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்றார். ஆதன் பின் ஜூர்ஜான் எனும் நகரில் வாழ்ந்த அபூ நஸ்மர் இஸ்மாயில் என்பவரிடம் கல்வி பயின்றார்.
அதன்பின் தூஸ் நகருக்குத் திரும்பி வந்து யூஸூப் அந்நப்பாஸ் அத்தூஸி என்பவரிடம் சூபிசக்கலையைப் பயின்றார். தனது இருபதாவது வயதில் நிசாபூரில் இருந்த நிழாமிய்யாக் கல்லூரியில் சேர்த்து இமாம் அல் ஹரமைன் என்றழைக்கப்பட்டு வரும் அஷ்அரிக் கோட்பாட்டாளருமான அபூ அல் மஆலி அல் ஜூவைரி என்பவரிடம் கல்வி பயின்றார்.
அக்கல்லூரியில் சமய இயல், ஷரீஆ, தத்துவ இயல், தர்க்கவியல் இயற்கை விஞ்ஞானம் தஸவ்வுப் முதலாம் பாடங்களைப் பயின்றார். மாணவர்கள் சுயமாக சிந்தித்து கருத்துக்களைக் கலந்துரையாடவும் விவாத அரங்குகளில் தத்தம் கருத்துக்களை தர்க்க ரீதியாக முன்வைக்கவும் இமாம் அல்ஹரமைன் வாய்ப்பளித்து ஊக்குவித்தார். இவ்வாய்ப்பை இளைஞர் கஸ்ஸாலி பயன்படுத்தித் தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டார். அவரது திறமைகளை அவதானித்த இமாம் அல் ஹரமைன் அவரை அறிவுக் கடல் என்று பாராட்டினார். தான் கல்வி கற்ற அதே கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றும் வாய்ப்பையும் பெற்றார்.
நிசாப்பூரில் மாணவராக இருக்கும் போதே அபூ அலி அல் பழில் அல் பாமிதி எனும் சூபி அறிஞரிடம் சூபிசக் கலையைப் பயின்றதுடன் சூபிசப் பயிற்சிகளும் ஈடுபட்டிருந்தார்.
கஸ்ஸாலியின் இருபத்தி எட்டாவது வயதில் அவரது ஆசிரியரான இமாம் அல் ஹரமைனும் ஆன்மீக வழிகாட்டியாக செயற்பட்ட அல்பாமிதியும் காலமாயினர். இக்காலப் பகுதியில் இமாம் கஸ்ஸாலியின் புகழ் நாலாபுறமும் பரவியிருந்தது. இதனால் செல்ஜூக் ஆட்சியாளர்களின் பிரதம அமைச்சராக கடமையாற்றிய நிதாமுல் முல்க் பக்தாதுக்கு வருமாறு அவருக்கு அழைப்புவிடுத்தார். இவ்வழைப்பை ஏற்று அங்கு சென்ற இமாம் கஸ்ஸாலி செல்ஜூக் அரசவையிலும் கல்வி அரங்குகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் அவரது ஆற்றலைப் புரிந்துகொண்ட பிரதமர் நிதாமுல் முல்கி பக்தாத் நிதாமிய்யாக் கல்லூரியின் சமய இயல் துறையின் தலைவராக இமாம் கஸ்ஸாலி அவர்களை கி.பி.1091 இல் நியமித்தார். இதன் மூலம் அன்றைய சமூகத்தில் நிலவிய கல்வித்துறையின் உச்ச பதவியையும் அரச மட்டத்தில் செல்வாக்கையும் பெற்றார். இதனால் முஸ்லிம் சமூகத்திலும் அவர் பெரும் செல்வாக்கையும் பெற்றார்.
செல்ஜூக் மன்னன் மலிக்ஷா, அவரது பிரதம அமைச்சர் நிதாமுல் முல்க், பாரசீகத்தின் ஏனைய சிற்றரசுகளின் தலைவர்கள் போன்றோர் அவரைப் பெரிதும் மதித்தனர். முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகளின் போதெல்லாம் சமாதானத் தூதுவராக சென்று சிறப்புப் பணிபுரிந்தார்.  இஸ்லாமிய சட்டவியல், சமய இயல், தத்துவ இயல் மெய்ஞ்ஞானவியல் ஒழுக்கவியல் முதலாம் துறைகளில் ஆழமான அறிவுடையவராக இருந்தார். இதன் மூலம் முஸ்லிம் உலகின் புகழ்மிகு முதல் மனிதராக கணிக்கப்பட்டார். ஆட்சியாளர்களதும் அறிஞர்களதும் பாராட்டை அவர் ஏககாலத்தில் பெற்றுக்கொண்டார்.
இதனால் ‘ஹஜ்ஜதுல் இஸ்லாம்’ ஸைனுள் ஆப்தீன், ‘முஜத்தித்’ என்றெல்லாம் பட்டம் சூட்டி கௌரவித்தனர். இவ்வாறெல்லாம் அவர் புகழ் ஏணியின் உச்சத்தை அடைந்திருந்த போதும் அவரின் உள்ளம் அறிவியல் ரீதியானதும் ஆன்மீக ரீதியானதுமான உளக்கிளர்ச்சி ஒன்றுக்கு ஆளாகியது. இயல்பாகவே அவரிடம் இருந்த விமர்சன ரீதியாக நோக்கும் மனப்பாங்கும் பல்வேறு துறைகளிலும் அவர் பெற்றிருந்த ஆழமான அறிவும் அன்றைய முஸ்லிம் சமூகத்தின் உண்மை நிலையைப் புலப்படுத்தின. இது அவரது உளக் கிளர்சிக்குக் காரணமாகியது.
கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்த குலபாஉர்ராசிதீன்களின் பண்பில் இருந்து ஆட்சியாளர்கள் விலகி கோத்திர உணர்வின் வழி ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சொகுசு வாழ்க்கையில் மூழ்கியிருந்து மட்டுமன்றி இஸ்லாமிய அறிவிலும் குன்றியிருந்தனர். தகுதியானவர்களைத் தேர்ந்து எடுத்து பதவிகளில் நியமிக்கும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கவில்லை.
கஸ்ஸாலி வாழ்ந்த காலத்து முஸ்லிம் சமூகம் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் அமைத்துக் கொடுத்த சமூகத்தில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தது. சமய உட்பிரிவுகளும் அவற்றிற்கிடையே முரண்பாடுகளும் பிளவுகளும் தோன்றியிருந்தன.
பகுத்தறிவுக்கு முதன்மை கொடுத்த கிரேக்க தத்துவ இயலை அதன் அடிவருடிகள் முஸ்லிம்களிடையே தீவிரமாகப் பரப்பினர். அதனால் சமய நம்பிக்கையின் அடிப்படையே தகர்த்துவிடக் கூடியளவு முஸ்லிம்களிடையே அது ஊடுறுவியது. அக்கால முஸ்லிம் அறிஞர்களால் கிரேக்க தத்துவக் கலையின் படை எடுப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சுமூகத்தின் பண்பாட்டுத்துறையும் வீழ்ச்சியடைந்திருந்தது. பலதரத்து மக்களும் குர்ஆன், சுன்னா கூறும் வழிகாட்டலை அலட்சியப்படுத்தினர். ஒரு முன்மாதிரியாக இருந்த முஸ்லிம் சமூகம் அவரது காலத்தில் பிற கலாசாரத் தாக்கங்களில் சிக்குண்டு நடுவழி பிறழ்ந்திருந்தது. பிற கலாசாரச் செல்வாக்கின் காரணமாக முஃதஸிலா போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட சிந்தனைக் குழுக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அவற்றின் உபகுழுக்களும் சமூகத்தில் நிலவின. அவற்றில் சிலவற்றின் தீவிரப் போக்கு காரணமாக சமூகத்தில் அமைதி குலைந்திருந்தது. கிலாபத் பல சிற்றரசுகளாக சிதைவடைந்து கலீபா செல்வாக்கிழந்து நடைப்பிணமாக செயற்பட்டார். மாசுபடிந்த இச்சமூகமும், குலபாஉர்ராசிதூன்கள் காலத்துச் சிறப்புற்றோங்கிய முஸ்லிம் சமூகமும் அறிஞரான இமாம் கஸ்ஸாலியின் கண்முன் நிலழாடின. அதன் விளைவாகவே பெயரையும் புகழையும் தந்த நிதாமிய்யாக் கல்லூரியின் பேராசிரியர் பதவியையும் சமூக அரசியல் ,ஈடுபாட்டையும் உதறித்தள்ளிவிட்டு பதினொரு வருடங்களாக சமூகத்தில் இருந்து ஒதுங்கி தனித்து வாழ்ந்தார்.
சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழத்தான் எடுத்த முடிவுபற்றி அவர் தனது ‘அல் முன்கீத் மினல்லைய்ல்’ (பிழையில் இருந்து விடுதலை) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘நான் போதனாசிரியராக இருந்து போதனை செய்து வருவதில் இருந்த நோக்கத்தைக் கவனித்தேன். அது அல்லாஹ்வின் அருள் பெறும் நோக்கமாக மட்டுமன்றி உலகில் செல்வாக்கு மிக்க ஸ்தானத்தையும் பெருமையையும் புகழையும் பெற வேண்டுமென்ற நாட்டமாய் இருப்பதை கண்டேன். சரிந்து கொண்டிருக்கும் ஒரு மண்மேட்டின் சிகரத்தில் நான் நிற்பதையும், நான் உடனே திருத்திக் கொள்ளாவிடின் நரக நெருப்பில் விழலாம் என்பதையும் திண்ணமாகக் கண்டேன்.
இதுபற்றி தொடர்படியாக யோசனை செய்தேன். பக்தாதை விட்டு உடனே நீங்கி இந்தத் தடைகளை அகற்றிக் கொள்ளலாம் என்று ஒரு நாள் முடிவு கட்டுவேன். மறுநாளோ என் முடிவைக் கைவிடுவேன். ஒரு காலை முன்வைப்பேன். மறுகாலைப் பின்வைப்பேன்….. இத்தகையவிதமாய் உலக ஆசாபாச எண்ணங்களுக்கும் அமர வாழ்வு பற்றிய எண்ணங்களுக்குமிடையே அகப்பட்டு அலைக்கழிக்கப்பட்டேன்….. அல்லாஹ் என் நாவை உலர வைத்துவிட்டான். இதனால் விரிவுரை நிகழ்த்த இயலாது போயிற்று…. என் மாணவர்களுக்கு போதனை புரிய இயலாதபடியாகிவிட்டது. இத்துடன் உண்ட சாப்பாட்டை அஜமிக்கச் செய்யவும் இயலாது போயிற்று. …. ஏன் உடல் நிலை மோசமாயிற்று. இதைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை வைத்தியர்கள் இழந்தனர். இந்தக் கோளாறு மனோவியா கூலத்தால் உண்டாகியுள்ளது. அதனால் உடல் நிலை கெட்டிருக்கிறது. அந்த மனோவியா கூலம் அகன்றாலே உடல் நலம் பெறும் என்று அவர்கள் கூறிவிட்டனர். (இதன்மூலம்) என் பதவியையும் செல்வத்தையும், குழந்தைகளையும், நண்பர்களையும் விட்டு மனம் திரும்புவதை அவன் அல்லாஹ் எனக்கு இலகுவானதாக்கினான்.’
ஹிஜ்ரி 488 துல்கஃதா கி.பி. 1095 நவம்பர் மாதத்தில் பக்தாதைவிட்டு டமஸ்கஸ் சென்று அங்கு இரு வருடங்களைக் கழித்தார். அதன் பின் பைதுல் முகத்திஸிலும் மக்காவிலும், மதீனாவிலும் சில காலங்களைக் கழித்தார். அக்காலப்பகுதியில் அவர் அனுஷ்டித்த ஆன்மீகப் பயிற்சிகளால் பக்குவ நிலை அடைந்தார். அதன் பின்பே கி.பி. 1105 இல் நிசாபூருக்கு மீண்டும் திரும்பி வந்தார்.
பதினொரு வருடங்களை மெய்ஞ்ஞான அனுஷ்டானத்தில் கழித்த இமாம் அவர்கள் பக்தாதுக்குத் திரும்பி வருவதற்கும் பின்வருவன காரணங்களாய் அமைந்தன. முஸ்லிம்களின் ஈமான் பலவீனமடைந்திருந்தது. முஸ்லிம்களின் வணக்க வழிபாடும் உயிரோட்டமற்றிருந்தது. அதனால் இச்சமூகத்தை மீட்டெடுக்க முயற்சிப்பது அவசியம் என்று அவர் கருதினார். இக்கருத்தை சமய சிந்தனையையுடைய அவரது நண்பர்களும் ஆதரித்து எதிரான சக்திகளை எதிர்த்துப் போராட முன்வருமாறு ஆட்சியாளர்களும் அவரைக் கோரினார். இதனால் அவர் தனிமை வாழ்வைத் துறந்து கி.பி. 1105இல் மீண்டும் சமூக வாழ்வில் புகுந்தார்.
நிகாபூரில் தன் சிந்தனை வழியிலான கல்விப் போதனையை மேற்கொள்வதற்காக ஒரு பாடசாலையை நிறுவி அங்கு பாடபோதனை நடத்தினார். கலீபாவும் செல்ஜூக் ஆட்சியாளர்களும் பக்தாதுக்கு வந்து நிசாமிய்யாக் கல்லூரியின் சமய துறைப் பேராசிரியர் பதவியை ஏற்குமாறு அவரைக் கோரினார். அப்பதவியை தன்னால் ஏற்க முடியாதென்று அவர் அறிவித்தார்.
இமாம் அவர்கள் நிசாப்பூரில் தங்கி தொடர்ந்து கல்வியைத் தேடுவதிலும் மாணவர்களுக்கு பாடபோதனை செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சமூகம் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக பல நூல்களையும் எழுதினார்கள். இத்தகு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஹிஜ்ரி 505/கி.பி. 1111இல் இறையடி எய்தினார்கள்.
1.இஹ்யா உலூமுத்தீன்2. முகாஸித் அல் பலாஸிபா3. தஹாபுத் அல் பலாஸிபா4. அல் முன்கித் மினழ்ழலல்5. றிஸாலா அல் குத்ஸிய்யா6. மயார் அல் இல்ம் பி பன்னில் மன்தீக்7. புதுஹாதுல் உலூம்8. மிஷ்காத் அல் அன்வார்9. முகாஷபாத் அல் குலூப்10.அல் மஉரிபாத் அல் அக்ழிய்யா11. மின்ஹாஜ் அல் ஆபிதீன்12. மீதான் அல் அமல்13. பிதாயதுல் ஹிதாயா14.நஸிஹாத் அல் முலூக்15. அல்கிஸ்தாஸ் அல் முக்தஸீம்16. முர்ஷிதுக் தாலிபீன்17. கிமியா ஸஆதக்
இமாம் கஸ்ஸாலி தான் வாழ்ந்த சமூகத்தின் சமய, ஒழுக்கறியல் நிலை பற்றி விமர்சன ரீதியான மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தின் ஆட்சியாளர்கள் பிரபுக்கள், உலமாக்கள், பொதுமக்கள், முதலாம் பலதரத்து மக்களும் உலக ஆசாபாசங்களில் மூழ்கியிருப்பதை அவதானித்தார். உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய இச்சமூகம் தன் தரம் குன்றியிருப்பதற்கான காரணம் பொருளாசையிலும் பதவி மோகத்திலும் மூழ்கியிருப்பதே என்று கருதினார். இப் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமூகத்தை மேம்படுத்த இச்சமூகத்தை சீர்திருத்தி இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டும் என்று கருதியே ‘இஹ்யா உலூமுத்தீன்’ என்ற நூலை எழுதினார்.
இமாம் கஸ்ஸாலி தத்துவவியலடிப்படையிலான ஆய்வுகளுக்கு முரண்பட்டவரல்லர். அவரே சமய இயலாளர்களுள் தத்துவவியல் பற்றி ஆழமாக கற்ற முதல் முஸ்லிமாவார். அவருக்கு முன்பு வாழ்ந்த முஸ்லிம் சமயவியலாளர்களுள் ஒரு பிரிவினர் கிரேக்க தத்துவவியலை மனப்பூர்வமாக ஏற்று ஆதரித்தனர். மறு பிரிவினர் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். கிரேக்க தத்துவவியலை ஆதரிப்பவரோ, எதிர்பார்ப்பவரோ அக்கலையில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை இமாம் கஸ்ஸாலி கொண்டிருந்தார். அதனால் தத்துவ இயல் சார்ந்த புகழ்பூத்த நூல்களை வாசித்து ஆழமாக ஆராய்ந்து அறிந்து கொண்டார். அதை அடுத்தே அவர் தத்துவ இயல்பற்றிய நூல்களை எழுதினார். தத்துவ இயல் பற்றி அவர் எழுதிய பல நூல்களில் மகாஸித் அல்பலாசிபா (தத்துவவியலாளர்களின் முரண்பாடுகள்) எனும் இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும்.
மகாஸிதுல் பலாஸிபா எனும் நூலில் தர்க்கம், பௌதீகம் Metaphysics…என்பன பற்றி நிலவிய சித்தாந்தங்களை விளக்கியுள்ளார். இந்நூலில் அவர் அரிஸ்டோட்டல் முன்வைத்துள்ள கருத்துக்களை விமர்சித்துள்ளார்.


நன்றி http://sufimanzil.org/

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top