வடகிழக்குப் பிரச்சினையின் போது ஆயுதபாணிகளான சிங்களவர் தமிழர்களுக்கிடையே முஸ்லிம் மாத்திரமே பார்வையாளர்கள், நடுநிலைவாதிகள், நிராயுதபாணிகள். ஆனால் நிராயுத பாணிகளை இங்கு தண்டிக்கப்படுவதும் உயிர்வாழும் உரிமை மறுக்கப்படுவதும் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான ஒட்டுமொத்தமான சதியாகும். இரத்தம், அது சிந்தப்படும் இடம், சந்தர்ப்பம், சூழ்நிலை மனிதர்களைப் பொறுத்தே அது கொலை என்றும் போராட்டம் என்றும் அர்த்தப்படும்.
வடகிழக்கு முஸ்லிம்கள் ஏணிகளாக, தோணிகளாக இருந்து தோள்கொடுத்து தமிழ் இயக்கங்கள் ஏற்படுத்திய வரலாற்றுத் துரோகங்களை நோக்கும் போது அது பொஸ்னியாவுக்கு சற்றும் குறைந்ததல்ல என்ற முடிவுக்கு நியாயவாதிகள் வரக்கூடும். அந்தளவுக்கு தமிழீழப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள விழுப்புண்கள், அதன் இறந்தகால, நிகழ்கால நியாயங்களுக்கு உரமூட்டவல்லன.
அந்த மனக்காயங்கள் இலகுவில் ஆறக்கூடியதல்ல. ஆற்றவும் கூடாது. புண்களை இன்னும் புடமிடவேண்டும். எமது இறந்த காலங்களை எரித்து நிகழ்காலத்தை நெரித்து எதிர்காலத்தை எச்சரிக்கையோடு எதிர்கொள்வதே இனி முஸ்லிம்களின் தெளிவான கண்ணோட்டமாக வேண்டும்.
1985 ஏப்ரல் தமிழ்-முஸ்லிம் கலவரங்களுக்கு முன்னதாக தமிழ்ப் பயங்கரவாத அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட இனப்படுகொலைகளை முஸ்லிம் சமூகம் நியாயப்படுத்த முற்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு. அவற்றுக்கு சமூக விரோதிகள், காட்டிக் கொடுத்தவர்கள், கள்வர்கள் என்றெல்லாம் இயக்கங்களால் இலகுவாக அடையாளப்படுத்தப்படுவார்கள். அதையே சத்தியம் என்று நம்பிக்கொண்டிருந்த நமது மக்கள் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே தைரியசாலிகள் என்பதையும் எமது மக்களை தண்டிக்கின்ற அதிகாரத்தை இயக்கங்களுக்கு யார் வழங்கியது? அதனைப் பிரயோகிக்கின்ற உரிமை அவர்களுக்கு உண்டா? என்றெல்லாம் இனரீதியான அளவுகோலோடு சிந்திக்க முற்பட்டது 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் கலவரங்களுக்குப் பிற்பாடுதான். அந்த யதார்த்தமான சிந்தனையின் வெளிப்பாட்டை நாம் இப்போது பரவலாக எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் தரிசிக்க முடிகிறது.
தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தலைவிரித்தாடிய 1985 காலப்பகுதியில் பல்வேறு மனித இழப்புகள் இக்கிராமத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தி இருந்தாலும் ஸ்தாபன ரீதியாக அக்காலப்பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திய படுகொலை என்றால் அது இஸ்மாயீல் (தபால் அதிபர்) அவர்களது மரணமாகும். இவர் சம்ஸம் ஸ்டோர் முதலாளி என்று மக்களால் அடைமொழியிட்டு அழைக்கப்பட்டவர்.
1985.4.16 திகதியில் ஒரு நாள் வயலுக்கு சூடடிக்க காலையில் சென்ற மனிதர் அன்றைய தினம் மாலை கடத்தப்பட்டார் என்ற செய்தி அறிந்து இப்பகுதி இளைஞர்கள் ரக்டர் வண்டிகளில் புதுவெளிப்பாலம் வரை சென்றார்கள். அங்கே தேடிச்சென்றவர்கள் கண்ட காட்சி ஒரு ஒற்றை வழிப்பாதையால் ஜீப் வண்டியொன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகாமையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் போஸ்மாஸ்டரின் துப்பாக்கியும் அவரது சைக்கிளும் சாத்தப்பட்டிருந்தது. இது இக்கடத்தல் சம்பவத்திற்கு யார் பொறுப்பாளிகள் என்பதையும் இதன் பின்னணி என்ன என்பதையும் தெளிவாக உணர்த்திற்று.
நிர்வாக மட்டத்திலே உயர் பதவி வகித்த ஒரு முஸ்லிம் மகனுக்கு ஏற்பட்ட இந்தக் கதி நமது சமூகத்தின் பின்னடைவுகளில் தலையாயது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஹிஜ்ரா நகர் அருகே வழிமறிக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய இளைஞர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க முஸ்லிம் பயணிகள் வெளிநாட்டில் உதிரம் சிந்தி உழைத்ததை இச்சம்பவத்தில் சிலர் பறிகொடுக்கின்றனர். கொள்ளையடித்தவர்கள் புலிகள் என்பதை சில இளைஞர்கள் இனங்கண்டு தைரியமாக நோட்டீஸ் ஒட்டி வெளிப்படுத்திவிட்டார்கள். வாழைச்சேனையில் காணப்பட்ட இந்தப் பிரசுரங்கள் சில புலி உறுப்பினர்கள் கிழித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞன் ராஸிக் சம்பவத்தின் உண்மைத் தன்மை பற்றி அவர்களிடம் வினவுகிறான். செய்ததை செய்தோம் என்று சொல்பவர்களா புலிகள்? அவர்கள் மறுத்தனர். ராஸிக்கை முறைத்தனர். பலன் தங்களோடு ஒன்றாகச் சேர்ந்து உதைப்பந்து விளையாடிய ராஸிக்கை அவர்கள் உதைப்பந்தாடினர். ஒரு பட்டப்பகலில் அவனை பலவந்தமாக பாஸாரில் வைத்து சுற்றி இருந்தோர் திகைத்து நிற்க புலிகள் இழுத்துச் சென்ற போது அவன் பார்த்த பார்வை, அவன் பார்வையால் கேட்ட உயிர்ப்பிச்சையை யாராலும் அங்கு வழங்க முடியவில்லை. கேள்விகேட்ட ராஸிக்கிற்கு அவர்கள் தந்த பதில் இதுதான்.
1987.12.2 இல் ஓட்டமாவடிப் பாலத்திலே புலிகள் வைத்த சிலிண்டர் வெடி பல இந்தியப் படைவீரர்களைக் காவு கொண்டுவிட்டது. ஆத்திரமுற்ற படையினர் சுற்றிலும் முஸ்லிம் கிராமங்கள் மீது சரமாரியாக சுட்டும் செல்லடித்தும் வெறிதீர்த்துக் கொண்டனர். சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் இவை நடந்தேறின. அன்றைய தினம் சுமார் 22 முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். (இந்தியப்படையின் தாக்குதலின் போது முஸ்லிம்கள் புலிகளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்காது விட்டிருந்தால் புலிகள் அன்று அழிந்தே இருப்பார்கள் என்று வாகரையில் நடந்த ஒரு கூட்டத்தில் புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா குறிப்பிட்டது நினைவுகூறத்தக்கது.) ஆனால் அதே இந்தியப் படையினரைக் கொண்டு முஸ்லிம் பகுதிகளில் பாரிய சேதம் விளைவிக்க வேண்டும் என்ற புலிகளின் நயவஞ்சகக் கணக்கு இத்தாக்குதலின் போது சாத்தியமாயிற்று.
இந்த அனர்த்தத்தில் அஸர் தொழுகையை முடித்து பிரார்த்தனை புரிந்த கையோடு சம்பவம் நடக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்ற ஜனாப் எம்.சி.எம். இஸ்மாயீல் ஆசிரியர் (தினகரன் பத்திரிகையாளர்) ஷெல்லடிபட்டு ஷஹீதானார். புன்னகைத்த முகமும் சுறுசுறுப்பான உள்ளமும் என்னேரமும் உற்சாகத்தோடு சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டு உழைத்த இவரின் மரணம் இப்பிரதேசத்தின் பாரிய வெற்றிடம் என்பது மறுக்க இயலாது. இலங்கையில் முதன் முறையாக யுத்த முனையில் கொல்லப்பட்ட தேசிய பத்திரிகையாளர் இவர்தான் என்பது புதைக்கப்பட்ட உண்மையாகும்.
சுறுசுறுப்பான மனித நடமாட்டத்திற்கு பேர்பெற்றது ஓட்டமாவடி முச்சந்தி. அதில் நடுநாயகமாக அலியாரின் வெற்றிலைக்கடை. மதிய நேரம் கடைகளில் கப்பம் வசூலித்துக் கொண்டே புலிகள் சிலர் அலியாரிடம் வருகிறார்கள். அதிகாரத் தோரணை, ஆயுத ஆணவம், அசைந்து கொடுக்காத அலியார் நியாயத்திற்காக நிமிர்ந்தார். அதுதான் அவர் செய்த தவறு. கோளைகள் அவனை சுருட்டிக் கொண்டு செல்ல எத்தனித்த போது உங்களால் என் பணத்தைத்தான் கொண்டு செல்ல முடியும் என்னையல்ல என்றான் அலியார். சூடு பறந்தது. சரிந்தது அலியார். சொன்னபடியே அங்கேயே ஷஹீதான வணங்கா முடி வெற்றிலைக்கடை அலியாரை இன்றைக்கும் இப்பகுதி மக்கள் கண்ணீரோடு நினைத்துப் பார்க்கிறார்கள்.
நெடிய உருவமும் நிமிர்ந்த நடையும் அழுத்தமாக வாரிவிடப்பட்ட தலை முடியும் அவர்தான் புஹாரி விதானையார். ஓட்டமாவடி கிராமத்தின் தலைமகன். 1985 இல் ஏப்ரல் கலவரத்தில் முஸ்லிம் கிராமங்கள் திட்டமிட்டு தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகளின் அணுசரனையோடு தாக்கப்பட்ட சமயங்களில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். தமிழ்த் தலைமைகளோடு நெருங்கிய உறவு கொண்டவர். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியோடு அப்போதையை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவை சந்தித்தபோது இவர் இப்பகுதி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றி ஆங்கிலத்தில் எடுத்துரைத்த போது ஜே.ஆர் அவரைப் பார்த்து நீர் என்ன சட்டத்தரணியா என்று கேட்டது அப்போது பிரபலம். ஆனால் அவரோ ஒரு கிராம சேவையாளர். இதே புஹாரி விதானையை புலிகள் கடத்திச் சென்று வாகரையில் மொட்டையடித்து அவமானப்படுத்தி சுட்டுக் கொன்ற கதையை அவ்வூர் மக்கள் வேதனையோடு இதயத்தில் எழுதி வைத்துள்ளார்கள். இது இன ஒற்றுமைக்கு பாடுபட்டவருக்கு புலிகள் தந்த பரிசு.
இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் மீராவோடை கிராமம் பெற்றெடுத்த முஹம்மது முத்துச் சேர்மன். அதிகம் படித்திராவிட்டாலும் மீராவோடையின் தலைமைத்துவ வெற்றிடத்தை நீண்டகாலமாக சிறப்பாக ஈடு செய்து வந்தவர். நமது மக்கள் தமிழ் மக்களோடு நெருக்கமான உறவைப் பேணவேண்டும் என்ற கருத்துடையவர். புலிகள் இயக்கத்திற்கு நன்கு உதவி செய்தவரும் அவர்களால் நன்கு அறியப்பட்டவரும் இவர்தான். இவரது இந்த உதவு மனப்பான்மைதான் உயிருக்கு உலைவைத்தது. பிற்காலத்தில் இவர் தங்களுக்கு எதிராக செயற்படக்கூடும் என்ற சந்தேகத்தில் புலிகள் இவரைக் கடத்தி கொலை செய்து விட்டனர். உதவி செய்வதாக இருந்தாலும் அது தகுதியற்றவர்களுக்குப் போய் சேர்ந்துவிடக்கூடாது என்ற படிப்பினையை இவரது இழப்பு இன்றைக்கும் அறைந்து சொல்கிறது.
ஈரானைக்காத்த கொமைனி போல எங்கள் கிராமங்களைக் காத்தார் ஒரு கொமைனி. அவர்தான் எங்களால் நன்கு அறியப்பட்ட அல்ஹாஜ் வி.எஸ். இப்றாஹீம் (சின்னத்தம்பி). 1990 ஜுன் மாதம் 23 இல் மக்கள் வார்த்தைகளில் வாழ்வின் நம்பிக்கைகளையும் அடிவைத்தே அச்சத்தையும் சுமந்திருந்த துக்ககரமான கணங்கள் அவை. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய அந்த நாட்களில் புலிகள் கும்புறுமூலை முகாமை பலமாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். பொறிக்குள் அகப்பட்ட நிலையில் இராணுவம். இவர்களை மீட்க இராணுவ அணியொன்று புனானை முகாமிலிருந்து புறப்பட்டு ஓட்டமாவடிப் பாலம் வழியாக வரத்தயாராகிக் கொண்டிருந்த போது இவர்களைத் தடுக்க புலிகள் பாலத்தின் இந்தப் பக்கம். ஆனால் கும்புறுமூலையில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியுடன் புலிகளும் ஓடிவிட்டனர். இதனை அறியாத இராணுவம் பலத்த ஆயுத முஸ்தீபோடு முன்னேறிவர எதிரே இருந்த முஸ்லிம் கிராமங்கள் பலிக்கடாக்களாகிக் கிடக்க ஊரைக்காப்பாற்ற யார் முன்வருவது? மரண அவஸ்த்தையில் எமது மக்கள் துடித்தனர்.
இந்நிலையில் தன்னந்தனியாக எமது கொமைனி உயிரைத் துச்சமெனக் கருதி முன்னேறி இராணுவத்துடன் கதைத்து சுமூகமாகப் பேசி தலைமைதாங்கி அழைத்துவந்தார். பின் கூட வந்த இராணுவ அணி உடன் கும்புறுமூலை சென்று இராணுவத்தைப் பாதுகாத்தது இவரது துணிவின் பலன். சுமார் 2 இலட்சம் பெறுமதியான ஆயுதங்கள் எமது கிராமங்களின் முகத்தின் மீது பாவிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. மக்கள் நிம்மதியடைந்தனர். இதுதான் அவர் செய்த தவறு.
இவரது துணிவு தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதிக் கொண்ட புலிகள் ஒருநாள் இரவு ஆயுதங்களுடன் தேடிவந்து அவரை நெருங்கி நிராயுதபாணியான கொமைனியின் கைகளால் அடிபட்டு பின்பு ஒரு புளுவைப் போல் சுட்டுக் கொன்றுவிட்டகன்றனர். (இவரது சத்தத்தைக் கேட்டு காப்பாற்ற ஓடிவந்த றபாயுதீன், அப்துல் கபூர் என்ற இளைஞர்கள் அன்று புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை திரும்பவில்லை. ஒரு தியாக புரிசனுக்கு புலிகள் தந்த பரிசுகள் இதுதான். இன்றும் ஒரு மெழுகுவர்த்தியாய், ஒரு ஊதுபத்தியாய் மக்கள் மனங்களிலே நறுமணம் வீசிக் கொண்டிருக்கிறார் எங்கள் கொமைனி.
தமிழர்களின் விடுதலை அவாவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஓட்டமாவடியில் கல்விக்குழைத்த முதன் மக்களில் ஒருவரான மர்ஹும் ஷரீப் அலி ஆசிரியர் அவர்களைத் தேடி ஒரு நாள் இரவு சில புலிகள் கப்பம் வசூலிப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள் துரதிஷ்டம் இதனை மோப்பம் பிடித்த இந்தியப்படையினர் இவர்களை எதிர்கொண்டு மறைந்திருந்தனர். இதனை அறியாத புலிகள் கப்பம் வசூலித்துக் கொண்டு ஷரீப் அலி ஆசிரியர் அவர்களின் வீட்டிலிருந்து வெளியேவர இந்தியப் படை சுட்டது. இதில் ஸ்தளத்தில் ஒரு புலி பலியானார். இந்தச் சம்பவம் பற்றி ஏற்கனவே எதுவும் அறியாத நிலையில் ஷரீப் அலி ஆசிரியர் இருந்தார் என்பதே உண்மை. இந்தத் தாக்குதலுக்கு ஷரீப் அலி ஆசிரியரின் உளவு வேலையே காரணம் என்று சந்தேகித்த புலிகள் ஒரு நட்ட நடுநிசியில் நிசப்தமான இரவில் ஷரீப் அலி ஆசிரியரை வீதியில் சுட்டுவிட்டுச் சென்றனர். புலிகளின் தவறான புலனாய்வுத் தகவலால் பலிகொள்ளப்பட்ட ஒரு அப்பாவியின் மரணமாகவே ஷரீப் அலி ஆசிரியரின் மரணம் இன்றும் நினைவுகூறப்படுகிறது. இதுதான் உண்மையும் யதார்த்தமுமாகும்.
1992 டிசம்பர் 26 இல் கல்குடாத் தொகுதி முஸ்லிம் மக்களின் கல்வி நிர்வாகத் தலைமைத்துவ முன்னேற்றப்பாதையில் ஒரு 25 வருட பின்னடைவை ஏற்படுத்திய சூரியன்கள் அஸ்தமித்த இருண்ட யுகம் அன்றுதான் நிகழ்ந்தது.
ஜனாப் வை. அஹ்மத் (எஸ்.எல்.ஏ.எஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், எழுத்தாளர், வாழைச்சேனையைப் பிறப்பிடமாக்க் கொண்டவரும் கல்குடாத் தொகுதியின் புத்திஜீவிகளில் தலையாயவரும்)
ஜனாப் ஏ.கே. உத்மான் (எஸ்.எல்.ஏ.எஸ். ஓட்டமாவடி உதவி அரசாங்க அதிபர், (தற்போது பிரதேச செயலகம்) மீராவோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகக் கொண்டவருமான ஜனாப் உத்மான் சிறந்த நிர்வாக ஆற்றலும் ஆளுமையும் உற்சாகமான செயற்பாடுகளும் உடையவர்.)
ஜனாப் எஸ்.ஏ.எஸ் மஹ்மூத் (பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர். பழகும் தன்மையாலும் மற்றவருக்கு உதவும் இயல்பினாலும் இனியவர்.)
ஜனாப் ஏ.பி. மொஹிதீன் (சட்டத்தரணி, சர்வதேச விவகாரங்களில் டிப்ளோமா பட்டம் பெற்றவரும் சட்டக்கல்லூரி பகுதிநேர விரிவுரையாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான இவர் இனிய சுபாவமும் இளகிய மனமும் உள்ளவர்.) இவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபரின் வாகன சாரதி திரு. மகேந்திரன்.
ஒரு சனிக்கிழமை காலையில் ஜெயந்தியாய குடியேற்றக் கிராமத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்காகவும் அப்பகுதி மக்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காகவும் ஜீப்பில் சென்றுகொண்டிருந்த போது மீயான் குளச் சந்தியில் புலிகள் வைத்த நிலக்கண்ணி வெடியில் சிதறுண்டு போனார்கள். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களில் இப்பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி சாகுல் ஹமீது என்பவரும் அடங்குவார். இப்படுகொலை இப்பிரதேச மக்களது ஆன்மாவையும் உணர்வுகளையும் உலுக்கி எடுத்ததில் பெரும் பங்கு வகிக்கின்றது. இது ஈடுசெய்ய முடியாத வரலாற்று வெற்றிடமாகவே நாங்கள் கருதுகிறோம். இது நடந்த சூட்டோடு இதன் பின்னணி தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகூட இதுவரை வெளியிடப்படாததில் இருந்து இதில் பல்வேறு நியாயபூர்வமான சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது.
மட்டக்களப்பு, பொலன்னறுவைப் பாதையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்நிலக்கண்ணிவெடி இராணுவ வாகனங்களின் தொடர்ச்சியான போக்குவரத்தின் போது பிரயோகிக்கப்படாமல் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக இவர்களை எதிர்பார்த்துப் பிரயோகிக்கப்பட்டிருப்பது ஒரு நீண்டகால சதிக்காக செய்யப்பட்ட திட்டமிடலின் அறுவடையா? சம்பவம் நடந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இராணுவ முகாம் இருந்தும் ஸ்தளத்திற்கு அவர்கள் வந்துசேர சுமார் அரைமணி நேரம் பிடித்ததாம். இதிலிருந்து இந்த சம்பவத்திற்கு இவர்களது பங்களிப்புப் பற்றியும் கேள்வி எழும்புவதை தவிர்க்க இயலவில்லை.
எதுவித முன்னறிவித்தலுமின்றி சுமார் பத்துமைலுக்குட்பட்ட ஜெயந்தியாய என்ற இடத்திற்கு இவர்கள் சென்று திரும்புவதை ஒரு குறுகிய இந்த விஜயத்தைத் தடுக்குமளவுக்கு மிகவும் துரிதமாக தகவல் பரிமாற்றம் நிகழ்ந்த உள்ளுர் சதி தொடர்பாகவும் பரவலான சந்தேகம் நிலவுகின்றது. நிர்வாக மட்டங்களில் குறிப்பாக கச்சேரியில் சமூக உணர்வோடு ஒரு முஸ்லிம் அதிகாரி செயற்படுவது இனிவரும் காலங்களில் அது ஒரு தற்கொலைக்கொப்பான காரியம் என்ற கருத்துப் போக்கை வளர்த்துவிட்ட உயர்மட்ட சதிகாரர்கள் யார்?
இவ்வாறான எண்ணற்ற ஐயங்களுக்கிடையில் விடைகாண முடியாத நிலையில் இப்படுகொலையின் பின்னணியிலுள்ள எதிரிகளின் எதிர்பார்ப்பு என்ன? முஸ்லிம் தலைமைத்துவங்கள், புத்திஜீவிகள், அத்தோடு முஸ்லிம் மக்களின் கல்வி மறுமலர்ச்சி என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன? சமூகம் கல்வியில் தன்னிறைவு காண தீவிரமாக உழைப்பது எங்களது ஆத்ம ரீதியான ஈடுபாட்டையும் எமது பாதுகாப்பு, இருப்பு, அமைதி, வாழ்வு என்பவற்றின் பிரகாசமான காலங்கள் அல்லாஹ்வின் பக்கமிருந்தே பெறப்படவேண்டும் என்பதில் உறுதி கொள்வோமாக!
இறுதியாக என் இனிய இளைஞர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! இரண்டு தசாப்த காலமாக இன ஒடுக்குதலின் ஊடாக நீங்கள் பெற்றுவந்த காயங்களையும் வேதனைகளையும் இயலாத தன்மை கொண்டு மூடி மறைத்துள்ளார்கள். பழம்பட்ட புண்களைக் கீறிக் கொண்டிருங்கள். இன்னும் இன்னும் இரத்தம் கசியட்டும். வரலாறு ஒரே பாதையில் எக்காலமும் பயணிப்பதில்லையே. ஒழுகின்ற இரத்தத்தில், மனக்கண்ணீரில் உங்களைப் பாருங்கள். இந்தப் பிரதேசத்தைப் பாருங்கள். எங்கே எங்கள் இளைஞர்கள்? எங்கே எங்கள் தலைவர்கள்? உரத்துச் சொல்லுங்கள். சில தமிழர் செய்த நயவஞ்சகத்தின் நடு கற்களாக வரலாற்றில் அவர்கள் ஜொலிக்கிறார்கள் என்று. வேறென்ன சொல்ல?
(கல்குடாத்தொகுதி வேர்களும் விலாசங்களும் – ஏ.ஜி.எம். ஸதக்கா (நிசப்தன்), பசுமை, இதழ்-1, ஒக்டோபர் 1995)

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top