இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையும், இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் என்ற பேற்றையும் பெறுபவர் மர்ஹும் அல்ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில் அவர்களாவார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இன்று வரையிலும் இவரது நாமம் சிறப்பான உயர்வான இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்றது. இவர் ஓர் அரசியல்வாதியாக அறியப்பட்டாலும் சமுதாயப்பற்றுள்ள தலைவராக உழைத்தவர். புத்தளத்தின் பூர்வீகக் குடும்பத்தைச் சார்ந்தவர். அதேநேரம், முழு நாட்டு மக்களுக்கும் இவரது சேவைக்கரங்கள் விரிந்திருந்தன.
1901 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஹமீத் ஹுசைன் மரிக்கார், ஆசியா உம்மா தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். இவருக்கு ஷேகு இஸ்மாயில் என்றே பெயரிட்டு அழைத்தனர். சிறு வயதில் புனித குர்ஆனை முறையாக ஓதி முடித்தார். புத்தளம் சென் அன்ரூஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் உயர் வகுப்புக் கல்வியையும் ஆங்கில மொழி மூலம் கற்றார். பாடசாலைக் கல்வியுடன் சமயக் கல்வியையும் ஒருங்கே பெற்று வளர்ந்தார்.
1920 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சையில் சித்தியடைந்த இவர், 1921 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் நுழைந்தார். 1925 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணி என்ற பெயருடன் வெளியேறினார். எனினும் சட்டத்தை மதிக்கும் பண்பு கொண்ட எச். எஸ். இஸ்மாயில் சட்டத்தரணியாக புகழ் பெறவில்லை.
அவரது பார்வை சமூக மேம்பாட்டின் மீது பதிந்திருந்தது. காதிகள் சபையின் தலைவரானார். புத்தளம் முகைதீன் ஜும்மா (பெரிய பள்ளி) மஸ்ஜித் பரிபாலன சபையின் தலைவராகப் பணிபுரிந்தார். பொதுச் சேவையில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக 1928 ஆம் ஆண்டு புத்தளம் உள்ளூராட்சி மன்ற (Local Board) தலைவராகப் போட்டியின்றித் தெரிவானார். 1930ம் ஆண்டு ஜன ஆசார சங்கம் என்ற சமூக நலன்புரி அமைப்பை ஸ்தாபித்தார். இதன் மூலம் வறிய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஆங்கிலக் கல்வியை போதித்தலும் மேற்கொள்ளப்பட்டன. 1933 இல் புத்தளம் மாவட்டச் சபையின் பிரதித் தலைவரானார். 1939 ஆம் ஆண்டு புத்தளம் நகர சபையாக தரம் உயர்ந்தபோது அதன் தலைவராகி, 1947 வரை 08 வருட காலம் நகராதிபதியாக சேவையாற்றினார்.
1944 இல் கல்விக் கழகம் என்ற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இதே கால கட்டத்தில் உள்ளூர் தனவான்களின் உதவியுடன் ஸாஹிராக் கல்லூரியின் கிளை புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அன்னாரின் நினைவாக புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் கட்டிடமொன்றுக்கு அவரது நாமம் சூட்டப்பட்டது.
உள்ளூர் அரசியலில் கிடைத்த அனுபவப் பாடங்களும், மக்கள் சேவையில் காணப்பட்ட விருப்பமும் இலங்கை வரலாற்றில் மாற்ற முடியாத நினைவுச் சின்னத்தைப் பதிக்கச் செய்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலுக்காக புத்தளம் தொகுதியில் போட்டியிட்டவர் எச். எஸ். இஸ்மாயில் மட்டுமே. எனவே, போட்டியின்றியே பாராளுமன்ற உறுப்பினரானார்.
1956 ஆம் ஆண்டு அரசியல் கட்சி சார்பில்லாமல் சுயேச்சையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எச். எஸ். இஸ்மாயில். எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க அரசின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி வேற்றுமையின்றி ஏகமனதாக தெரிவானார் என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் என்ற பெயரையும் பேற்றையும் பெற்றார்.
புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள சிற்றூர்களில் பாடசாலைகள். வைத்தியசாலைகள். தபால் நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட அரச பணிமனைகள் பல இன்னாரது காலத்தில் ஆரம்பித்து, திறந்துவைக்கப்பட்டன.
மர்ஹும் எச். எஸ். இஸ்மாயில் அவர்கள் புத்தளம் தேர்தல் தொகுதிக்குள் மேற்கொண்ட பணிகளுடன் அவரது சேவைக்குறிப்பினை கருக்கிக் கொள்வது முறையாகாது. தேசிய மட்டத்தில் அவர் ஆற்றிய சேவைகளை ஆண்டு ரீதியாக நோக்குவது பொருத்தமாகும். 1952ம் ஆண்டு All Ceylon Muslim Socety மற்றும் Young Ceylon Movement ஆகியவற்றின் செயல் துடிப்பு மிக்க உறுப்பினரானார்.
அறிஞர் ஏ. எம். ஏ. அkஸ் அவர்களின் முஸ்லிம் கல்வி சகாய நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினரானார். அதன் நிதிக்காக புத்தளம் உப்பளத்தின் ‘அரைக்காடு’ எனப்படும் இடத்தில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான 02 உப்பு வாய்க்கால்களை தானமாக வழங்கினார். இதன் வருமானம் இன்று வரை முஸ்லிம் சகாய நிதிக்கு சென்றடைகின்றது.
1953 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பள்ளிவாசல் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இப்பொறுப்பில் இருக்கும்போது கடும் பிரயத்தனத்தின் மத்தியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பள்ளிவாசலை நிர்மாணித்தார்.
1957 இல் இலங்கை பைத்துல்மால் நிதியத்தை ஸ்தாபித்தார். இதன் மூலம் வறுமை ஒழிப்பு பணியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார்.
எச். எஸ். இஸ்மாயிலைத் தேடி புகழும் பதவிகளும் வந்தன. அவற்றிற்கான தகுதியும் தகைமையும் அவரிடமிருந்தது. இத்தனை, இருந்தபோதிலும் 1965 ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விரும்பி ஒதுங்கிக்கொண்டார்.
அரச செலவில் 1958 ம் ஆண்டு பிரித்தானியாவில் சபாநாயகர் மகாநாட்டுக்கு சென்று நாடு திரும்பியதும் மீதிப் பணத்தை அரசுக்கு மீள ஒப்படைத்த கனவான் ஆவார். இஸ்மாயில் அவர்கள் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்து தனக்கென்று சம்பளம் போட்டு அந்த பணத்தில் தான் ஹஜ்ஜுக்கு சென்றார்.இவரது சேவையின் நினைவாக இலங்கை 18ம் நாள் மே மதம் 2003 ஆண்டு தபால் முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது 
1947 முதல் 1965 வரை 17 வருட காலமாக அரசியல் தளத்தில் நின்று சமூக சிந்தையுடன் அவர் ஆற்றிய சேவைகளும ஆரம்பித்து வைத்த சமூக நிறவனங்களும் இன்று வரையிலும் இலங்கை மக்களுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.


 நன்றி தினகரன் 

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top