ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்ன ணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஈட்டியிருக்கும் பெரு வெற்றியானது எமது நாடு 1948ம் ஆண்டு சுதந் திரம் பெற்றதற்குப் பின்னரான அரசியல் வர லாற்றில் முக்கியதொரு பதிவாகத் திகழ்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பொதுவேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பல்வேறு கோணங்களிலெல்லாம் உருவாக்கப்பட்ட பாரிய தடைகளையெல்லாம் தாண்டி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெரு வெற்றியீட்டி நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுள்ளார்.
தேர்தல் முடிவு தொடர்பாக உற்று நோக்குகையில் இரு பிரதான விடயங்களை இவ்விடத்தில் சுருக்கமாக ஆராய்வது மிக அவசியமாகும். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கான காரணிகளும், மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான பின்னணிகளுமே இங்கு ஆராயப்பட வேண்டிய இரு பிரதான தலைப்புகளாகின்றன. புதிய ஜனநாயக முன்னணி யானது இனம், மதம், மொழி போன்ற அனைத்து க்குமே அப்பாற்பட்ட பொதுநலன் சார்ந்ததொரு அரசியல் அமைப்பாகவே விளங்குகிறது.
பெரும் பான்மைக் கட்சிகளுடன் தமிழ், முஸ்லிம் சிறு பான்மைக் கட்சிகளும் புதிய ஜனநாயக முன்ன ணியில் அங்கம் வகிப்பது மாத்திரமன்றி அம் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இன ஐக்கியத்தையும் தேச நலனையும் வலியுறுத்துவ தாகவே அமைந்திருந்தது.
சர்வாதிகாரம், ஊழல், முறைகேடு, துஷ்பிரயோகம் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாட் டில் முற்றுமுழுதாக இல்லாதொழித்து சுபிட்சமும் இன ஐக்கியமும் நிறைந்த பலமிக்க தேசத்தைக் கட்டியெழுப்புவதே புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்த விஞ்ஞாபனத்தின் பிரதான கருப் பொருளாக விளங்கியது.
இத்தகைய கொள்கைத் திட்டங்கள் காரணமாகவே நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனை த்து பேதங்களை யும் மறந்து ஒன்றிணைந்து மைத் திரிபால சிறி சேனவை இத்தேர்தலில் ஆதரித்தனர்.
பொதுவான கொள்கைத் திட்டத்தின் கீழ் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்த முதலாவது தேர்த லாக ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் விளங்குகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கொள்கைத் திட்டங்கள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந் திருந்தமை காரணமாகவே மக்கள் இத்தேர்தலில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்திக் காண்பி த்துள்ளனரெனலாம். இவ்வெற்றிக்கு மறுபுறத்தில் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் தோல்விக்கான பின் புலக் காரணிகளை ஆராய்வது இரண் டாவது முக்கிய விடயமாகும். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னடைவுக்கான காரணி களை இங்கு ஒவ்வொன்றாகப் பட்டி யலிடுவது இயலாத காரியமாகும்.
2005, 2010 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து தேர்தலில் இறங்கிய வேளையில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் தேர்தல் பிரசாரங்களில் வெளியிடப்பட்ட கருத்து களில் மக்களுக்கு உடன்பாடு கிடை யாதென்பதை தேர்தல் முடிவு துல் லியமாக எடுத்துக் காட்டுகிறது. இன வாதம் பொதிந்த கருத்துகள், அபாண் டமான குற்றச்சாட்டுகள், திரிபுபடுத் தப்பட்ட கதைகள் போன்றவை யெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ தரப் புக்கே பிரதிகூலமாகிப் போயுள்ளன.
அரசியல் நாகரிகமும், இன ஐக்கியமும் எப்போதும் கட்டிக் காக்கப்பட வேண்டு மென்பது இத்தேர்தல் முடிவு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பாடமாகும். அதேசமயம் போலியான பிரதிமைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொருட்டு ஊடகங்களை தவறாகக் கையாள்வதும் முறையான காரியமல்ல.
தேர்தல் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இது போன்ற ஏராளமான தடைக்ககற்களை யெல்லாம் தாண்டி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஈட்டியிருக்கின்ற வெற்றி இலகுவானதொரு சாதனை யல்ல... அரசியல் பேதம், இனவாதம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பால் நன்மைகளையும் தீமைகளையும் நாட்டு மக்கள் நன்கு சீர்தூக்கிப் பார்த்து நாட்டின் எதிர்கால சுபிட்சம் கருதி இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இனவாதமென்பது அனைத்து இன மக்க ளாலும் புறந்தள்ளப்பட்டிருப்பதுடன் தேசத்தின் எதிர்கால நலனே முன் னுரிமை பெற்றுள்ளதென்பதையும் தேர் தல் முடிவு ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறது. அரசாங்க வளம் முறைகேடான விதத்தில் வீண் விரயம் செய்யப்படாதிருப்பதுடன் நாட்டில் ஜனநாயகம் நிறைந்த ஆட்சியொன்று உதயமாக வேண்டுமென்பதுவும் மக்க ளின் அபிலாஷைகளாக உள்ளன.
அதேசமயம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆளுமையுள்ள தலைமை அதிகாரி ஒருவருக்கு முன் னுதாரணமானவராக அனைவராலும் நோக்கப்படுகிறார். ஜனநாயகத்தை மல ரச் செய்வதற்கான வாய்ப்பும், நம்பிக் கையும் உருவாகுவதற்கு தேர்தல் ஆணை யாளரின் நெறிபிறழாத நடவடிக்கைகள் காரணமாக அமைந்துள்ளன.
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் கொள்கைத் திட்டங்கள் எதிர்வரும் கால ங்களில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்தில் உறுதியாக முன்னெடுக்கப்படுமென்பதில் எதுவித ஐயமும் இருக்கப் போவதில்லை. இதற்கான ஆதரவை தொடர்ந்தும் அவருக்கு வழங்குவது தேசாபிமானம் கொண்ட மக்களின் தார்மிகக் கடமையாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன, மத, அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் நாட்டின் சுபிட்சம் கருதி தோழமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதே இனிமேல் அவசியமானதாகும். இத் தருணத்தில் ‘தினகரன்’ பத்திரிகையும் புதிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறது.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top