உமது பெயர்களைப் பொறுக்கிக் கொண்டு
போய்விடுங்கள்
எமது நேரத்திலிருந்து உங்கள் மணித்தியாலங்களை
திரும்ப எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
எத்தனைப் படங்களைக் களவெடுக்க இயலுமோ
அத்தனைiயும் திருடிக்கொள்ளுங்கள்
உங்களுக்குத் தெரியும்
எமது நிலத்திலிருந்து ஒரு கல்
எவ்வாறு வானக்கூரையை அமைக்கும் என
உங்களால் சொல்ல முடியாது என உங்களுக்குத் தெரியும்
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உம்மிடம் கத்தி எம்மிடம் இரத்தம்
உம்மிடம் உருக்கிரும்பும் நெருப்பும் எம்மிடம் தசை
உம்மிடம் பிறிதொரு டாங்கி எம்மிடம் எமது கற்கள்
உம்மிடம் வாயுக்குண்டு எம்மிடம் மழை
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
எம்மிருவருக்கும் மேலும் ஒரே வானம்தான்
எமது இரத்தத்தில் உமது பங்கை எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்
இரவுப் போசனத்துக்கு இருந்துவிட்டுப் போய்விடுங்கள்
எமது இரத்தசாட்சிகளின் ரோஜாக்களை
நாம் கண்ணுற வேண்டும்
நாங்கள் விரும்புகிறபடி நாங்கள் வாழவேண்டும்
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
உமது பிரம்மைகளையெல்லாம்
பாழ்பட்டதொரு குழிக்குள் குவித்துமூடிப் போய்விடுங்கள்
புனிதச் சண்டைக் காளையின் மரபுக்கு ஒப்ப
காலத்தின் கைப்பிடியைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
துப்பாக்கி விசையின் லயத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குச் சந்தோஷமூட்டாததை நாங்கள் இங்கு கொண்டிருக்கிறோம், போய்விடுங்கள்
உங்களுக்கு இல்லாதது எங்களுக்கு இருக்கிறது
மக்கள்குருதி கசியும் ஒரு தாய்நிலம் குருதித் தாய்நிலம்
இதனைப் புரிந்து கொள்வது உமது நினைவுக்கு அல்லது மறதிக்கு நல்லது
வந்துபோகும் சொற்களினிடையில் வந்துபோகிறவர்களே
நீங்கள் எங்கே போய் இருக்க விரும்புகிறீர்களோ
அங்கே போக இது நேரம்
எங்களுக்கிடையில் நீங்கள் இருக்க வேண்டாம்
நீங்கள் எங்கே போய் சாகவிரும்புகிறீர்களோ
அங்கே போய் சாக இது நேரம்
எங்களுக்கிடையில் இருந்து சாக வேண்டாம்
எங்கள் நிலத்தில்
எங்களுக்கு நிறையக் காரியங்கள் இருக்கிறது
எங்களுக்கு இங்கு கடந்தகாலம் இருக்கிறது
எங்களது வாழ்வின் முதல் ஒலியை
இங்கே நாங்கள் கொண்டிருக்கிறோம்
நிகழ்காலம் மற்றும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை
நாங்கள் கொண்டிருக்கிறோம்
வாழ்வையும்
அப்புறமாக வாழ்வுக்கு அப்புறமான வாழ்வையும்
நாங்கள் கொண்டிருக்கிறோம்
ஆகவே —
எங்கள் நிலத்திலிருந்தும் எங்கள் கடலிலிருந்தும்
வெளியே போங்கள்
எங்கள் கோதுமைகளை விட்டு எங்கள் உப்பை விட்டு
வெளியே போங்கள்
எங்கள் காயங்களை விட்டு
எங்கள் எல்லாவற்றையும் விட்டு
வெளியே போங்கள்
நினைவுகளின் நியதியையொப்பி
வெளியே போய்விடுங்கள்

 மஹ்மூத் தர்வீஷ்

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top