1917 மே 09ஆம் திகதி புத்தளம் நகரில் வாழ்ந்த சமய பற்றுள்ள கொடையாளர் சி. அ. மு. முஹம்மது ஹனிபா தம்பதியினருக்கு மஹ்மூது நெய்னா மரிக்கார் மகனாகப் பிறந்தார். தனது ஒன்றரை வயதிலேயே தாயை இழந்த குழந்தை நெய்னா மரிக்கார் தந்தையின் சகோதரியான மாமியின் அரவணைப்பில் வளர்ந்தார்.
1922இல் புத்தளம் புனித அன்ரூஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று கொழுப்பு ஸாஹிராவில் நுழைந்தார். 1932இல் சிரேஷ்ட கேம்பிரிஜ் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியில் சித்தியடைந்தார்.
1934இல் பல்கலைக்கழக நுழைவைப் பெற்று 1938இல் B.A.(Hon) பட்டம் பெற்றார். உயர் கல்விக்காக லண்டன் மாநகரில் அமைந்துள்ள கிங்ஸ் கல்லூரியில் இணைந்து நவீன வரலாறு, ஐரோப்பிய வரலாறு ஆகியவற்றில் B. A. பட்டத்தையும், சிவில் சேவைப் பரீட்சையிலும் தேறினார். 1939இல் புனித கத்தரின் கல்லூரியில் சேர்ந்து 1942இல் L.L.B,L.L.M, பரிஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
இக்காலப்பிரிவில் இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றதனால் லண்டன் நகர பல்கலைக்கழக மாணவர்கள் பட்டாளத்தில் சேர்க்கப்பட்டனர்.
‘ஹோம் கார்ட்’ படைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மூன்று வருடங்கள் அதில் பணியாற்றினார். ஒரு போர் வீரனுக்குரிய பயிற்சிகளையும் இவர் அங்கு பெற்றுக் கொண்டார்.
1947இல் தாயகத்தில் கால் பதித்த இளம் சட்டத்தரணி நெய்னா மரிக்கார் சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றினார். பிறகு சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணி செய்தார். இதே நேரம் முஸ்லிம் சகாய நிதியத்தின் முக்கிய அங்கத்தவராகவும் நன்கொடையாளராகவும் விளங்கினார்.
1960ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட எம். எச். எம். நெய்னா மரிக்கார் புத்தளம் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தெரிவானார்.
1965இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது 8000 மேலதிக வாக்குகளினால் வெற்றியீட்டினார். எனினும் 1970இன் பொதுத் தேர்தலில் 103 வாக்குகளினால் மட்டும் தோல்வியுற்ற இவர், 1971இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் மக்கள் பிரதிநிதியாகினார்.
அன்று தொடக்கம் 1988 வரை புத்தளம் தொகுதி பாராளுமன்ற பிரதிநிதியாகவும், இலங்கை பாராளுமன்றத்தின் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றார்.
அன்னார் நிதித் திட்டமிடல் அமைச்சராக விளங்கிய காலத்தில் 1988.11.21ஆம் திகதி வெளியிடப்பட்ட ரூபா 20/=, 50/=, 100/= மற்றும் 500/= ஆகிய பணத்தாள்களில் இவரது கையொப்பம் ஆங்கிலத்தில் இடப்பட்டு சரித்திரப் புருஷரானார். நெய்னா மரிக்கார் இந்துஸ்தானி சங்கீதம் கற்றார்.
அரசியல் மேடைகளில் பாடுவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இசைப் பிரிவில் பாடகர் தெரிவுக் குழுவில் சேவையாற்றியுள்ளார். தனது புகைப்படக் கருவியினால் எடுத்த அரிய புகைப்பட தொகுப்பும், பெறுமதிவாய்ந்த புத்தகங்கள் அடங்கிய தனிப்பட்ட நூலகமும் இவருக்கு சொந்தமாயிருந்தன. கடுமையான மக்கள் பணிகளுக்கு மத்தியிலும் ஐவேளை தொழுகையை உரிய நேரத்திற்குத் தவறாமல் நிறைவேற்றுதல் அன்னாரது நேர்மைக்கும், பண்பாட்டுக்கும் வழிகாட்டியது எனக் கூறலாம்.
அரசியல் தலைவராக 28 வருடங்கள் புத்தளம் தொகுதியில் ஆற்றிய சேவைகள் பல. சீன அரசின் நிதியுதவியில் அமைத்த குடிநீர்க் குழாய் திட்டம், புத்தளம், மன்னார் பெருவீதி விஸ்தரிப்பு, சவீவபுரம், சமீரகம, பெரிஸ்டர்புர, கல்பண்டைன்கம, முள்ளிபுரம் ஆகிய வீடமைப்புத் திட்டங்கள் உட்பட கல்வி, சுகாதார, விவசாய மற்றும் அடிப்படை வசதிகளின் பட்டியலில் இருந்து தனது சொந்த பணத்தில் நிர்மாணித்துக் கொடுத்தவைகளையும் அன்பளிப்பு செய்த காணிகளையும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
1) புத்தளம், மஸ்ஜித் வீதியில் பழைய தண்ணீர்த் தாங்கி அமைந்துள்ள காணியும், மன்னார் வீதியில் நீர்த்தேக்க களஞ்சியம் அமைந்துள்ள காணியும்.
2) முள்ளிபுரம், சவீவபுரம், பெரிஸ்டர்புர, சமீரகம வீடமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ள காணிகள் அனைத்தும் இவருக்குச் சொந்தமானவை. (முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அவர்களின் ‘கம் உதாவ’ திட்டத்திற்குரியன)
3) புத்தளம் உட்பட சூழவுள்ள சிற்றூர்களில் பாடசாலை மற்றும் வைத்தியசாலைக் கட்டடங்கள்.
பாராளுமன்ற உறுப்பினராக மக்களின் உள்ளத்தை வென்ற நெய்னா மரிக்கார் சொல்லின் பொருளுக்கேற்ப மக்களின் அன்பாளரானார். கடந்த 1995.02.03 ஆம் திகதி இவ்வுலகை விட்டும் அன்னார் பிரிந்து இற்றைக்கு பல வருடங்கள் கடந்த பின்னர், இன்றளவும் கூட புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரிடம் எம். பி. யின் வீட்டு வீதி எதுவெனக் கேட்டால் அவன் எடுத்த எடுப்பிலேயே காட்டுவது அன்னார் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த அவரது வீடு அமைந்துள்ள வீதியைத்தான்.



நன்றி தினகரன் 

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top