1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்த இவர், தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார். இவர் தனது கல்வியை கண்டி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்தார். 


பாடசாலைக் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளராகவே விளையாடினார். ஆயினும் தனது 14 ஆவது வயதில் பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோவால் ஓவ்ப் ஸ்பின்னராக பந்து வீச பயிற்றுவிக்கப்பட்டார். 
இதனடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவில் பாடசாலை சார்பாக விளையாடியதுடன் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரராகவே களமிறங்கினார். பாடசாலை மட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முரளி, 1990 / 91 களில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அவ்வாண்டின் Bata வின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார். 

இலங்கை A அணியில் இடம்பிடித்த இவர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட முரளி வீழ்த்தவில்லை. 
இதன் பின்னர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதனால் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். 

தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சிறப்பாக செயற்பட்டு வந்த முரளிக்கு பல சோதனைகள் அடுத்தடுத்து காத்திருந்தன. 

முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் Boxing Day என கருதப்படும் நாள் 1995 ம் ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார் Chuck Ball என்று கூறி குற்றம்சாட்டினார். 

அதன் பின் 10 நாட்கள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் திகதி அன்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியின்போது முரளிதரன் தனது முதலாவது ஓவரை வீசிய போது 3 முறை Chuck Ball என்று நோபோல் வழங்கப்பட்டது. அன்று நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். 

முரளியின் பந்துவீச்சு Chuck Ball எனக் கருதக் காரணம், ஓவ்ப் ஸ்பின் முறையிலேயே பந்துவீசும் முரளிதரன் லெக் ஸ்பின் முறையிலும் பந்து வீசுவதினால் ஏற்பட்ட தடுமாற்றமே. எவ்வாறாயினும் இப்போட்டியின் போது துணை நடுவராக செயலாற்றிய டொனி மெக்கியுலின் அமைதியாகவே இருந்துவிட்டார். 

1996 ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர். 

இதற்கமைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. 1998 1999 காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது. 

இப்போட்டியின் போது நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். முரளி பந்து வீசிய வேளையில் அவர் முறையற்ற விதத்தில் பந்து வீசும் பாணி அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 

அப்போது இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய அர்ஜுன ரணதுங்க நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை, இந்தப்போட்டியை இத்தோடு நிறுத்திவிடுகிறோம் என்று கூறிய அர்ஜுன அணியை பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றார். 


அப்போது குறுக்கிட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமானது. இந்தச் சம்பவத்தை அடுத்து அர்ஜுன ரணதுங்கவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. நடுவராக செயலாற்றிய ரொஸ் எமர்சனும் சுகயீன விடுமுறை என்று காரணம் காட்டி போட்டித் தொடலிருந்து விலகிக் கொண்டார். 

முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 500 வது விக்கெட்டை 2004 ம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி கண்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது வீழ்த்தியிருந்தார். இப்போட்டித் தொடரில் “துஸ்ரா' முறையில் பந்து வீசியிருந்தமை தொடர்பாக போட்டி நடுவராகக் கடமையாற்றிய கிறிஸ் பிரோட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்திருந்தார். 

அதனால் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மருத்துவ தீர்வுகள் முரளிதரனுக்கு சாதகமாக அமைய, “துஸ்ரா' பந்து வீச்சினை வீசுவதற்கு முடியும் என ஐசிசி யினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் முரளி. 

இதனடிப்படையில் “தூஸ்ரா' பந்து வீசப்படும் வேளையில் 12.2 பாகையில் கை மடங்கும் போது சராசரியாக மணிக்கு 86 கிலோ மீற்றர் வேகத்திலும் ஓவ் பிரேக் பந்து வீச்சின் போது 12.9 பாகையில் கை மடங்கும் அதேவேளை மணிக்கு 99.45 கிலோ மீற்றர் வேகத்திலும் பந்து வீசுகிறார் என்பது அறியப்பட்டது. 
இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியினால் சிறப்பாக செயற்பட்ட முரளி பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டி விட்டுதான் ஓய்வு பெற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.




நன்றி அஜ்மல் மஹ்தீ 

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top