1947ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி பலஸ்தீனின் ஜாஃபா மற்றும் அஸ்கலான் ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ள இப்னா என்னும் கிராமத்தில் பிறந்தார் அஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி. 1948ல்  இப்னாவிலிருந்து துரத்தப்பட்டு  காஸாவில் அடைக்கலம் புகுந்த குடும்பங்களில் ரன்திஸியின் குடும்பம் ஒன்று. கான் யூனுஸ் அகதிகள் முகாமில் வறுமையும் கஷ்டங்களும் அவர்களை வாட்டி வதைத்தன. ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது காலில் செருப்பில்லாமல்தான் சென்றார் ரன்திஸி. குடும்பத்தின் ஏழ்மையை சமாளிக்க, படிக்கும் போதே வேலைக்கும் சென்றார்.1965ல் பள்ளிப் படிப்பை முடித்தவர் எகிப்தின் அலெக்ஸான்திரியா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் சேர்ந்தார். 1972ல் மருத்துவ படிப்பை முடித்து பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மருத்துவத்தில் மேல்நிலை பட்டத்தையும் பெற்றார்.


1976ல் படிப்பை முடித்துவிட்டு காஸா திரும்பியவர் கான் யூனுஸின் நாஸர் மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்தார். ஆனால், தனது சமுதாய பணிகளுக்கு இந்த பணி உகந்ததாக இல்லை என்று உணர்ந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இணைந்தார்.சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் விடுதலை வேட்கையை மக்களுக்கு ஊட்டவும் இதுதான் தனக்கு சரியான களம் என்பதை கண்டு கொண்டார். மாணவர்களுக்கு அறிவியல் பாடத்துடன் சேர்த்து சுதந்திர வேட்கையையும் ஊட்டினார். இவருடைய  வசீகரமான பேச்சுகளால் மாணவர்கள் கவரப்பட்டனர். இஸ்ரேலின் அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தை உள்ளத்தில் ஏற்றினர். இவரால் வார்க்கப்பட்ட மாணவர்கள் பலர் பின்னர் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களாக உருப்பெற்றனர்.

1987 டிசம்பரில் இன்திபாதா எனப்படும் மக்கள் எழுச்சி பலஸ்தீனில் வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. ஷேக் அகமது யாசின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் அஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸியும் ஒருவர். இஸ்ரேலியர்களின் தூக்கத்தை விரட்டிய ஹமாஸ் தலைவர்களை கைது செய்யவும் கொலை செய்யவும் ஆரம்பித்தது இஸ்ரேல். முதல் இன்திஃபாதா தொடங்கிய சில மாதங்களிலேயே இவர்  கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய படைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவரை கைது செய்தது இஸ்ரேல். அதன் பின்னர் கைது நடவடிக்கைகள் அவர் வாழ்க்கையில் தொடர் கதையாகின.
விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மார்ச் 4,1988ல் மீண்டும் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதனை வழி நடத்துவதாக குற்றம்சாட்டியது இஸ்ரேல். இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இம்முறை இஸ்ரேலிய சிறையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்  உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரை சித்திரவதைப்படுத்தினர். ஆனால், இந்த சித்திரவதைகள் தன்னை மேலும் மெருகூட்டியதாக அஷ் ஷஹீத் ரன்திஸி தெரிவித்தார். செப்டம்பர் 1990ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஆனால், விடுவிக்கப்பட்ட நூறு நாட்களில் மீண்டும் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது இஸ்ரேல். இம்முறை நெஜவ் பாலைவனத்தில் உள்ள கெட்சியாட் கேம்பில் சிறை வைக்கப்பட்டார்.

அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் இட்சக்சா  ரபின். அஷ் ஷஹீத் ரன்திஸி உள்ளிட்ட நானூறுக்கும் அதிகமான பலஸ்தீனியர்களை டிசம்பர் 17, 1992 அன்று பலஸ்தீனிற்கு வெளியே தெற்கு லெபனான் எல்லையில் விட்டு வருமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் ஹமாஸ் இயக்கத்திற்கும் அஷ் ஷஹீத் ரன்திஸிக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. குளிரின் தாக்கம் தாங்காமல் அவர்கள்  அனைவரும் லெபனானிற்கு சென்று விடுவார்கள். அத்துடன் தனக்கு தலைவலி தீர்ந்து விடும் என்று எதிர்பார்த்தார் ரபின்.இளைஞர்களும் வயோதிகர்களும் பாமரர்களும் பட்டதாரிகளும் இதில் இருந்தனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஹமாஸ் இயக்கத்தினர். வெயில், மழை, பனி என எதுவும் அவர்களை அசைக்கவில்லை. எவரும் லெபனானிற்கு செல்லவில்லை. எல்லையில் உள்ள மர்ஜ் அல் சுஹர் என்னுமிடத்தில் கூடாரம் அடித்து அங்கேயே தங்கினர்.இவர்களின் நிலையை அறிந்த உலக ஊடகங்கள் அங்கே படையெடுத்தன. வெளியேற்றப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார் அஷ் ஷஹீத் ரன்திஸி. ஊடகங்களுக்கு தங்களின் நிலையை எடுத்துரைத்தார். இஸ்ரேலின் கொடுஞ் செயல்களை விவரித்தார். உலக ஊடகங்கள் இந்த அவலங்களை படம் போட்டு காண்பித்தன. அஷ் ஷஹீத் ரன்திஸி உலகம் அறியும் நபர் ஆனார். விளைவு, இவர்கள் அனைவரையும் மீண்டும் பலஸ்தீனிற்கு அனுமதிக்குமாறு இஸ்ரேல் நிர்ப்பந்திக்கப்பட்டது. அனைவரும் ஒரு வருடம் கழித்து பலஸ்தீன் திரும்பினர்.
பலஸ்தீனிற்கு திரும்பியவுடன் மர்ஜ் அல் சுஹரில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டடார்.மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷேக் அகமது யாசினுடன் சில நாட்கள் ஒரே சிறை அறையில் இருந்தார் . சிறைத்தண்டனை முடிந்து 1996ல் விடுவிக்கப்பட்டார். தனது வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளை சிறையில் தான் கழித்தார். இருந்தபோதும் வெளியே இருந்த நாட்களில் இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார்.1994ல் இஸ்ரேலுடன் ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஃபத்தாஹ் தலைவர் யாசர் அரஃபாத். இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் வன்மையாக கண்டித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அஷ் ஷஹீத் ரன்திஸி ஆஸ்லோ ஒப்பந்தத்தை கண்டித்து தொடர்ந்து பேசி வந்தார். அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீன அதிகார சபை இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டித்தார். இதனால், அரஃபாத் கடும் எரிச்சல் அடைந்தார்.அஷ் ஷஹீத் ரன்திஸியை கைது செய்யும் பொறுப்பை இஸ்ரேலிடமிருந்து ஏற்றுக் கொண்டார்.
1996 முதல் 2000 வரையிலான காலக்கட்டத்தில் பலமுறை கைது செய்யப்பட்டார் . பலஸ்தீன அதிகார சபையின் சிறைக்கூடங்களில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பர் 2000ல் ஏற்பட்ட இரண்டாம் இன்திபாதா பல மாற்றங்களை பலரிடம் ஏற்படுத்தியது. அரபாத் தனது போக்கை மாற்றினார். இரண்டாம் இன்திஃபாதா ஆரம்பித்த முதல் வாரத்தில் அஷ் ஷஹீத்ரன்திஸி விடுவிக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியில் ரன்திஸியுடன் ஒரே மேடையில் தோன்றிய அரஃபாத் அவரை கட்டியணைத்து வரவேற்றார். இதுபோன்ற நிகழ்வுகளால் கோபமடைந்தது இஸ்ரேல்வெளியே வந்த அஷ் ஷஹீத் ரன்திஸி மீண்டும் தனது எழுச்சி உரைகளை தொடர்ந்தார். ஹமாஸ் இயக்கத்தினரின் தொடர் தாக்குதல்களால் இஸ்ரேல் நிலை குலைந்தது. “அனைத்திற்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை இஸ்ரேல் உணர்ந்துள்ளது என்று கூறினார் .
மக்கள் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்தது இஸ்ரேல். ஜனவரி 10, 2003 அன்று அஷ் ஷஹீத் ரன்திஸி சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது ஆறு ஏவுகணைகளை வீசி தாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில்  மயிரிழையில் உயிர் தப்பினார். தாக்குதலின் காரணமாக சில நாட்களேனும்  அமைதியாக இருப்பார் என்று இஸ்ரேல் போட்ட கணக்கும் தப்பானது. தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் பேட்டியளித்தார் அஷ் ஷஹீத் ரன்திஸி. “ஆக்கிரமிப்பாளர்களான இந்த கிரிமினல்களிடமிருந்து விடுதலையை பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.
மார்ச் 22,2004ல் ஹமாஸ் இயக்க தலைவர் ஷேக் அகமது யாசினை படுகொலை செய்தது இஸ்ரேல். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்க தலைவராக அறிவிக்கப்பட்டார் அஷ் ஷஹீத் ரன்திஸி. அடுத்த 25 நாட்களில்அதாவது  ஏப்ரல் 17,2004ல் அவர் சென்ற வாகனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதில் அவரின் ஓட்டுனரும் பாதுகாவலர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த அஷ் ஷஹீத் ரன்திஸி அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரை மணி நேரத்தில் அவர் மரணத்தை சந்தித்தார். சில தினங்களுக்கு முன் ரன்திஸி வெளிப்படுத்திய அவரின் “ஹார்ட் அட்டாக்கால் மரணம் அடைவது அல்லது அப்பாச்சி ஹெலிகாப்டர் தாக்குதலால் மரணம் அடைவது. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதாக இருந்தால் நான் அப்பாச்சி ஹெலிகாப்டரையே தேர்வு செய்வேன் என்ற ஆசை அன்று  நிறைவேறியது. அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அஷ் ஷஹீத் ரன்திஸி படுகொலை செய்யப்பட்டார்.

ஜனாஸாவில் கலந்து கொண்ட மக்களின்  ‘அஷ் ஷஹீத் ரன்திஸி, நீங்கள் ஓய்வெடுங்கள். உங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்கிறோம் என்ற முழக்கத்தை ஏற்றுக் கொண்டவராக ஓய்வெடுக்க சுவணம் நோக்கிப் பயணித்தார் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top